தரமற்ற டயப்பர்கள் விற்பனை: 5 வர்த்தக நிலையங்களுக்கு 1.4 இலட்சம் ரூபா அபராதம்!
பயன்பாட்டின் போது கிழிந்து சேதமடைவதாக நுகர்வோரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து, சட்டப்பூர்வ இறக்குமதியாளர் விபரங்கள் இன்றி சிறுவர் மற்றும் பெரியோருக்கான டயப்பர்களை (Diapers) விற்பனை செய்து வந்த ஐந்து வர்த்தக நிலையங்களுக்கு 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் விற்பனை செய்யப்படும் சில சிறுவர் டயப்பர்கள் பயன்படுத்தும் போது சேதமடைவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. இதனையடுத்து, அதிகாரசபையின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போதே இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
விசாரணைகளின் போது, 85 ஆம் இலக்க உத்தரவை மீறி, இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் அல்லது இணையதள முகவரி போன்ற எவ்வித விபரங்களும் இன்றி டயப்பர்களைக் காட்சிப்படுத்தி விநியோகித்த ஐந்து வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன.
இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் செப்டம்பர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்குப்பொருட்களாகச் சமர்ப்பிக்கப்பட்ட 81 சிறுவர் டயப்பர் பொதிகள் மற்றும் 6 பெரியோருக்கான டயப்பர் பொதிகள் உட்பட மொத்தம் 87 டயப்பர் பொதிகளையும் முற்றாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொதுமக்கள் டயப்பர்களைக் கொள்வனவு செய்யும் போது இறக்குமதியாளர் விபரங்கள் மற்றும் ஏனைய லேபல் தகவல்களைச் சரிபார்க்குமாறும், தரம் குறைந்த பொருட்கள் தொடர்பில் சிக்கல்கள் எழுந்தால் அவற்றின் பொதிகள் மற்றும் பெறுகை ரசீதுகளைப் பத்திரப்படுத்தி வைக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சந்தேகத்திற்குரிய இதுபோன்ற விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் 1977 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.