அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மேலும் வீழ்ச்சி: விற்பனை விலை 336 ரூபாயைக் கடந்தது!
அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (17) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டாலரின் வாங்கும் விலை மற்றும் விற்பனை விலை ஆகிய இரண்டும் உயர்வடைந்துள்ளன.
அதன்படி, அமெரிக்க டாலர் ஒன்றின் வாங்கும் விலை நேற்றைய தினம் பதிவான 326.31 ரூபாயிலிருந்து 327.90 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேவேளை, அதன் விற்பனை விலையும் 335.48 ரூபாயிலிருந்து 336.92 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, வளைகுடா நாணயங்கள் உள்ளடங்கலாக ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் கூடைக்கு எதிராகவும் இலங்கை ரூபாயின் பெறுமதியில் சிறிய அளவிலான மாற்றங்கள் பதிவாகியுள்ளன.