136 கிலோ ஹெரோயின் கடத்தல்: தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை
ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, தெஹிவளை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி சிலாபம், ஆனைவிலுந்தாவ பகுதியில் சிலாபம் பிரிவு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சோதனையின்போது பொலிஸாரால் 211 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரச இரசாயன பகுப்பாய்வாளரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், அதில் 136 கிலோகிராம் 99 கிராம் தூய ஹெரோயின் அடங்கியிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
2017 ஆம் ஆண்டில் தனிநபர் ஒருவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாக இது பதிவாகியிருந்ததுடன், இதன் சந்தைப் பெறுமதி சுமார் 100 கோடி ரூபா எனக் கணக்கிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.