அரசாங்கத்திற்கு எதிராக சஜித் - ரணில் கைகோர்ப்பு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தை சீர்குலைத்து, ஒரு கட்சி ஆட்சியை உருவாக்க முனைவதாக குற்றம் சுமத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) இணைந்து செயற்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற “ஜே.ஆர்., ஆளுகை மற்றும் மத்திய பாதை” என்ற தலைப்பிலான கலந்துரையாடலிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த டி.எஸ். சேனாநாயக்க அரசியல் அக்கடமியின் முன்னாள் மாணவர் சங்கத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.
கொள்கை ரீதியான கூட்டணி
இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசியல் பதவிகள், சலுகைகள் அல்லது தனிப்பட்ட நன்மைகளுக்காக இந்த கூட்டணி அமைக்கப்படவில்லை என்றும், கொள்கை ரீதியான அரசியல் மாற்றீட்டை உருவாக்கவே இரு கட்சிகளும் ஒன்றிணைவதாகவும் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு தீர்வுகாணும் வகையில், முற்போக்கான மற்றும் மக்கள் சார்ந்த கொள்கை கட்டமைப்பின் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனநாயக நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக இரு கட்சிகளும் இணைந்து போராடும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கை தற்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
ஜே.ஆர். பாணி 'மத்திய பாதை' பொருளாதாரம்
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனையான 'மத்திய பாதை' (Middle path) அணுகுமுறையையே இரு கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், சந்தைப் பொருளாதாரத்தை சமூக நலன்புரி மற்றும் சமூக ஜனநாயகத்துடன் இணைக்கும் இந்த அணுகுமுறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் நலிவுற்ற சமூகங்களையும் பாதுகாக்கும் எனக் கூறினார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் குறித்துப் பேசிய அவர், நாட்டின் மக்கள் தொகையில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையானோர் வறுமையில் வாழ்கின்றனர் என்றும், பல நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன என்றும் தெரிவித்தார். இச்சவால்களுக்கு முகங்கொடுக்கவும், தற்போதைய நிர்வாகத்திற்கு மாற்றீட்டை வழங்கவும் இரு கட்சிகளும் பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணையும் என்றார்.
கடந்த மே மாதமே இரு கட்சிகளும் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இருப்பினும், நேற்றைய நிகழ்வில் முறையான கட்சி இணைப்பு , தேர்தல் உடன்படிக்கை அல்லது தலைமைத்துவ ஏற்பாடுகள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதையும் சஜித் பிரேமதாச வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.