பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள் நாளை ஒருநாள் பணிப்புறக்கணிப்பு
அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள் நாளை (25) ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் இரண்டு நாட்கள் அடையாளப் பணிப்புறக்கணிப்பிலும் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு (UGC) நவம்பர் 16ஆம் திகதியிட்டு அனுப்பிய கடிதத்தில், பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு இதனைத் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதுவரை உரிய தீர்வுகளை வழங்கவில்லை என அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அதிகாரப்பூர்வ சந்திப்பொன்றுக்கும் இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் வாரங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தொடர பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாகக் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இந்தப் பணிப்புறக்கணிப்புகளால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளன.