பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக ஜே.வி.பி. பொலிஸில் முறைப்பாடு
வென். பலாங்கொட கஸ்ஸப தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளது.
குறித்த முறைப்பாடு ஒக்டோபர் 23ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஹாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் போது, இரண்டு கத்திகளுடன் ஒருவர் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புபடுத்தியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் பெலவத்தையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமையகத்துடன் தொடர்புடையவர் என வென். பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அந்த நபருக்கும் தமது கட்சியின் தலைமையகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஜே.வி.பி. மறுத்துள்ளது.
பொலிஸ் முறைப்பாட்டு இலக்கமான CIB II 289/237 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டில், குறித்த கருத்து பொய்யானது என்றும், அது பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அடிக்கடி வருகை தரும் கட்சியின் பெலவத்தை தலைமையகத்தின் பாதுகாப்பு தொடர்பிலும் அச்சம் எழுந்துள்ளதாகக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ள ஜே.வி.பி., அதற்கான ஆதாரங்களாகக் காணொளிப் பதிவுகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளையும் சமர்ப்பித்துள்ளது.