பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிராக நாடளாவிய போராட்டம் – செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை!
அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) ஆகியவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சட்டத்தரணிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
தமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
குறித்த சட்டங்களுக்கு எதிரான கூட்டு அறிவிப்பொன்று நேற்று வியாழக்கிழமை (19) கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் கைச்சாத்திடப்பட்டது.
இதன்போது உரையாற்றிய மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே, ஜனநாயக சீர்திருத்தங்களை முன்னெடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் ஊடாக அரச அதிகாரங்களை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
சந்தேகநபர்களை 72 மணித்தியாலங்கள் வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதிக்கும் முன்மொழிவையும் அவர் கடுமையாக விமர்சித்தார். பொலிஸ் காவலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மரணச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான அதிகாரங்கள் குறித்து தீவிரமான கவலைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
காவல் தடுப்புக் காலத்தை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைப்பது மாத்திரம், இந்தச் சட்டமூலம் தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் குறித்த சட்டங்களைத் திரும்பப் பெறத் தவறினால், பரந்துபட்ட மக்கள் போராட்ட இயக்கமொன்றை உருவாக்கி எதிர்ப்பை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் வசந்த முதலிகே எச்சரித்தார்.
இதேவேளை, சட்டத்தரணி திஸ்ஸ வீரகொட இலங்கையில் சட்டங்களை உருவாக்கி நிறைவேற்றும் நடைமுறைகளை விமர்சித்தார்.
சட்டமூலமொன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், அதனை உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு பொதுவாக 14 நாட்கள் மாத்திரமே வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரே பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் விரிவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சட்டங்கள் இறுதிக்கட்ட அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்னதாகவே அவை தொடர்பில் அர்த்தமுள்ள பொதுவிவாதங்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன், நாட்டில் சட்டங்களை உருவாக்கும் செயற்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.