பட்டிப்பொல வனப்பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – ஆறு பேர் கைது
நுவரெலியா, அம்பேவெல பகுதியில் அமைந்துள்ள பட்டிப்பொல ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வனப் பகுதிக்குள் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நுவரெலியா வனப் பிரிவு அதிகாரிகள் நேற்று (23) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பல்மடுல்லை மற்றும் இங்கிரிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள், மீப்பிலிமான பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து, பலத்த பாதுகாப்புடன் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இந்த சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், கண்டி, கம்பளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இந்த நடவடிக்கையை வழிநடத்தியிருக்கலாம் என விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.