நீல்தியா பொக்குனாவுக்கான சுற்றுலாப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
இராவணா எல்ல சரணாலயத்திற்குள் அமைந்துள்ள நீல்தியா பொக்குனாவுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சரணாலயத்திற்குள் சுற்றுலா நடவடிக்கைகளைப் புதிய விதிமுறைகளின் கீழ் உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 2026 செப்டெம்பர் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட 2506/43ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், இராவணா எல்ல சரணாலயத்திற்குள் சுற்றுலா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்ட விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் முறையான அனுமதியின்றி சிலர் சுற்றுலாப் பயணிகளை நீல்தியா பொக்குனாவுக்கு அழைத்துச் செல்வதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
திணைக்களத்தினால் வழங்கப்படும் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் மற்றும் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டி ஒருவரின் துணையின்றி அப்பகுதிக்குள் பிரவேசிப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும், நீல்தியா பொக்குனாவைச் சூழவுள்ள இயற்கைச் சூழல் மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்பையும் பாதுகாப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.