நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் விவகாரத்தில் முடிவு – தேர்தல்கள் ஆணைக்குழு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவே செயற்பட்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கட்சியின் அங்கீகாரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக இன்று (13) வெளியிடப்பட்ட அறிக்கையில், கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் நிலவும் உள்முரண்பாடுகள் காரணமாக அதன் அங்கீகாரம் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு முதல், செயலாளர் பதவி தொடர்பான தீர்க்கப்படாத முரண்பாடுகளைக் கொண்ட அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, இரு தரப்பினரையும் கடந்த நவம்பர் 6ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தது.
இதன்போது, செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சைக்கு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றம் நிலுவையிலுள்ள வழக்கில் தீர்ப்பு வழங்கிய பின்னர் முடிவெடுப்பது என இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனவே, செயலாளர் பதவி தொடர்பான முரண்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்து பாதிக்கப்படாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் அங்கீகாரம் நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தவறான ஊடகச் செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இந்தத் தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளார்.