நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரின் வீட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சோதனை!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சய சமரசிங்கவின் கல்கிசையில் அமைந்துள்ள இல்லத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் சோதனை நடத்தியுள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, குறித்த இல்லத்தில் காணப்பட்ட பாதுகாப்புப் பெட்டகமொன்றையும் அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், இலங்கை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, இல்லம் முழுமையாகச் சோதனையிடப்பட்டதுடன், சிலரிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தச் சோதனைக்கான குறிப்பிட்ட காரணம் மற்றும் விசாரணையின் மேலதிக விபரங்கள் தொடர்பில் அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.