சீரற்ற காலநிலையால் புத்தளத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து – 12 பேர் காயம்!
இலங்கையின் புத்தளம் – அநுராதபுரம் வீதியில், மீ ஓயா பாலத்திற்கு அருகில் சொகுசுப் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து, சீரற்ற காலநிலை காரணமாக வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் ஏழு பெண்கள், ஒரு சிறுமி மற்றும் நான்கு ஆண்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் சிறியளவிலானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் பேருந்தின் சாரதியும் நடத்துநரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.