வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா தபால் நிலையம் புனரமைப்பு – சுற்றுலாத் தலமாக மேம்படுத்தத் திட்டம்
நுவரெலியாவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தபால் நிலையக் கட்டடம், அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் தபால் சேவையின் அடையாளத்தையும் பாதுகாத்து, தேசிய மட்டத்திலான சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கில் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.
தபால் திணைக்களம் வெளியிட்ட தகவலின்படி, முன்னதாகப் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பேசப்பட்ட இந்த வரலாற்றுக் கட்டடத்தைப் பாதுகாப்பதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அபிவிருத்தி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில், நுவரெலியா தபால் நிலைய வளாகத்துக்கு அண்மையில் விஜயம் செய்த தபால் மா அதிபர் ருவான் சத்குமார, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
இதன்போது, கட்டடப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை, தொல்லியல் திணைக்களம் மற்றும் கட்டடத் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
புனரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பணிகளின் தரத்தை உறுதிப்படுத்துவது தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடல்களில் மத்திய மாகாண பிரதி தபால் மா அதிபர் அஸ்லம் ஹசன், நிர்வாகம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பதில் பிரதி தபால் மா அதிபர் சமீஷா டி சில்வா உள்ளிட்ட தபால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும், இலங்கை கடற்படை மற்றும் தொடர்புடைய அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா தபால் நிலையத்தை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதுடன், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கான அதன் பங்களிப்பை மேலும் அதிகரிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.