சுகாதார உதவியாளர்களின் சீருடை விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ் பேசும் கட்சிகள் கோரிக்கை
சுகாதார உதவியாளர்களுக்கான தற்போதைய சீருடை விதிமுறைகளை, கலாசார மற்றும் மத உணர்வுகளைக் கருத்தில் கொண்டு அவசரமாக மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுகாதாரத் தரநிலைகள், தொழில்முறை ஒழுங்குகள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணும் அதேவேளை, கலாசார மற்றும் மத உணர்வுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அந்தப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம், இது தொடர்பாக இன்று (17) சுகாதார அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விவகாரம் தொடர்பில் முன்வைத்துள்ள பரிந்துரைகளைத் தொடர்ந்து, சீருடை விதிமுறைகள் குறித்து எழுந்துள்ள கவலைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுகாதார உதவியாளர்களின் சீருடை விதிமுறைகள், நியாயமான கலாசார மற்றும் மத விருப்பங்களுக்கும், ஆடை அணிவதில் கடைப்பிடிக்கப்படும் அடக்கமான நடைமுறைகளுக்கும் இடமளிக்கும் வகையில் அமைய வேண்டும் எனப் பேரவை தெரிவித்துள்ளது. அதேநேரம், மருத்துவச் சுகாதாரம் மற்றும் தொழில்முறைத் தரநிலைகள் பாதிக்கப்படாத வகையில் இவ்விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தற்போதுள்ள சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்து, திருத்தங்களை மேற்கொள்வதுடன், நாட்டிலுள்ள அனைத்து அரச சுகாதார நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடிய தெளிவான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசியக் கொள்கையொன்றை உருவாக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கான அழைப்பையும் பேரவை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், இதற்காக முன்மொழியப்பட்ட குழு உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளதா, இதுவரை எத்தகைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, திருத்தப்பட்ட தேசிய சுற்றறிக்கை எப்போது வெளியிடப்படும் என்பன தொடர்பில் தெளிவுபடுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் எதிர்க்கட்சிகள் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து நியாயமான தீர்வொன்றை எட்டுவதற்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் பேரவை தெரிவித்துள்ளது. எனினும், தேவையான கொள்கை மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சாரும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தேவையற்ற இன மற்றும் சமூக முரண்பாடுகளுக்கு வழிவகுப்பதைத் தவிர்க்கும் வகையில், சுகாதார அமைச்சு விரைவாகப் பதிலளிப்பதுடன், தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான கால அட்டவணையையும் வெளியிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC), ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA), இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) ஆகிய ஆறு அரசியல் கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.