தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை – இலங்கை புதிய சாதனை

arvloshan.com

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் 20 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (20) இந்த இலக்கை இலங்கை எட்டியுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்த 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது குடும்பத்தினரான தாய் நதாலியா, தந்தை செர்கெய் மற்றும் மகள் அன்னா ஆகியோருடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை முதன்முறையாக 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை என்ற இலக்கை எட்டியிருந்தது. தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதியும் இந்த இலக்கை எட்டியிருந்தது.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்ந்து மீட்சியடைந்து வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை இந்தச் சாதனை எடுத்துக்காட்டுவதாகத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல், சர்வதேச விமானப் போக்குவரத்து வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், விமான எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உலகப் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியிலேயே இந்த இலக்கை எட்ட முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், 2025 நவம்பரில் ஏற்பட்ட 'டித்வா' அனர்த்தத்தைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், அதன் வளர்ச்சி வேகம் தொடர்ந்து பேணப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாத்துறை அமைச்சின் தரவுகளின்படி, இவ்வாண்டு நவம்பர் 10 முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாளாந்த சராசரி சுற்றுலாப் பயணிகள் வருகை 7,480 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 7,130 ஆகக் காணப்பட்டது. இது சுமார் 4.9 சதவீத அதிகரிப்பாகும்.

புதிய சர்வதேச விமான சேவைகளின் அறிமுகம், நேரடி விமானப் போக்குவரத்து இணைப்புகளின் விரிவாக்கம், புதிய சுற்றுலாச் சந்தைகளில் பிரவேசித்தல் மற்றும் சர்வதேச சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவையே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், சுற்றுலாத்துறை ஊடாக நாட்டுக்குக் கிடைக்கும் பொருளாதாரப் பலன்களையும் அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, சர்வதேச தரங்களுக்கு ஏற்ப சுற்றுலா வருமானத்தைக் கணக்கிடும் முறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மாற்று விகிதங்கள், பொருளாதார நிலைமைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் செலவின முறைகள் ஆகியவற்றையும் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் பதிவான மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகை எண்ணிக்கையை இவ்வாண்டு நிறைவடைவதற்கு முன்னர் முறியடிப்பதே அரசாங்கத்தின் அடுத்த இலக்காகும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்காக விமானப் போக்குவரத்து இணைப்புகளை விரிவுபடுத்துதல், சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், புதிய சந்தைகளை அடையாளம் காணுதல் மற்றும் சுற்றுலாச் சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் தனியார் துறை, விமான நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

பொரளை டி.எஸ். சேனநாயக்க சந்தியில் இன்று இரவு முதல் வீதி மூடல்

...

arvoshan.com

15 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் வரி அதிகாரிக்கு சிறைத்தண்டனை

...

arvoshan.com

நிலுவை BO5, BO7 விண்ணப்பங்களுக்காக மேலதிக சேவை நாட்கள் அறிவிப்பு

...

arvoshan.com

2024–2026 காலப்பகுதியில் சீனாவின் பயிற்சித் திட்டங்களால் 2,481 இலங்கை அரச அதிகாரிகள் பயன்

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

...

arvoshan.com

ராஜகிரிய விக்டோரியா முதியோர் இல்லத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்

...

arvoshan.com

வாகனக் கடன் மற்றும் குத்தகை வசதிகளுக்கு இலங்கை மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகள்

...

arvoshan.com

சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் போலிச் செய்திகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது – பொலிஸ் பேச்சாளர்

...

arvoshan.com

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு

...

arvoshan.com

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரி அனுப்பிய 9 கடிதங்களுக்கும் பதிலில்லை – தொழிற்சங்க நடவடிக்கைக்கு GMOA எச்சரிக்கை

...

arvoshan.com

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டுக் கொலை: சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

...

arvoshan.com

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு – பொதுமக்களுக்கு சுகாதார எச்சரிக்கை

...

arvoshan.com

இலங்கையில் FBI அதிகாரிகள்: 80க்கும் மேற்பட்ட சாதனங்கள் ஆய்வு

...

arvoshan.com

இம்ரான் கான் விடுதலை தொடர்பான விவாதத்திற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் தடை

...

arvoshan.com

மொனராகலையில் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 2,100 கஞ்சா செடிகள் மீட்பு – சந்தேகநபர் கைது

...