டுபாயில் பிடிபட்ட 'பஸ் லலித்' இலங்கைக்கு வருகை: தொடர் குற்றச்செயல்கள் அம்பலம்!
சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' என அழைக்கப்படும் 36 வயதுடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலின் முக்கிய புள்ளியான களுத்துறை தெற்கைச் சேர்ந்த சந்தேகநபர், இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் தலைமையிலான உத்தியோகத்தர்கள் குழுவினால் நாடு கடத்தி வரப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் சம்பந்தப்பட்ட பல வீரியமிக்க குற்றச்செயல்கள் தொடர்பில் காவல்துறையினர் தற்போது தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் பின்வரும் கொடூர சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:
2013 ஹன்வெல்ல தாக்குதல்: கூர்மையான ஆயுதத்தால் நபர் ஒருவரைத் தாக்கி படுகாயப்படுத்தியமை.
2021 நெலுவன்துடுவ தீவைப்பு: வணிக வளாகம் மற்றும் லொறி ஒன்றுக்குத் தீவைத்தமை.
2021 துப்பாக்கிச்சூட்டு முயற்சி: வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு முன்பாக நபர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, படுகாயப்படுத்தி கொலை செய்ய முயன்றமை.
2022 ஹன்வெல்ல தாக்குதல்: மூவரை வெட்டிப் படுகாயப்படுத்தியமை.
2022 ஹரஸ்புர துப்பாக்கிச்சூடு: அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொலை வழக்கிற்கு உதவியமை மற்றும் சதித்திட்டம் தீட்டியமை.
2023 படுகா இரட்டைக் கொலை: இருவரைக் சுட்டுக் கொன்றமை.
2024 ஹன்வெல்ல கொலை: நபர் ஒருவரை படுகொலை செய்தமை.
2024 நெலுவன்துடுவ வர்த்தகர் கொலை: வர்த்தகர் ஒருவரை திட்டமிட்டு படுகொலை செய்தமை.
2025 கொஸ்கம துப்பாக்கிச்சூடு: முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி காயப்படுத்தியமை.
2025 கொள்ளுப்பிட்டி துப்பாக்கி வழக்கு: கைப்பற்றப்பட்ட டி-56 (T-56) ரக துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை பிறிதொரு சந்தேகநபருக்கு வழங்கியமை.
2025 மீகொட கொலை: பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவரை சுட்டுக்கொன்றமை.
2025 மீகொட தப்பித்தல் சம்பவம்: தப்பிச் செல்வதற்காக வான்நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியமை.
இதுதவிர, போதைப்பொருள் கடத்தல் , சட்டவிரோத சொத்துச் சேர்க்கை மற்றும் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இன்றைய தினம் நாடு கடத்தப்பட்ட சந்தேகநபரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.