சுகாதாரமற்ற முறையில் தயிர் கொண்டு சென்ற இருவருக்கு ரூ.60,000 அபராதம்
சுகாதார மற்றும் வெப்பநிலை கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாமல் தயிர் கொண்டு சென்ற இருவருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் மொத்தமாக 60,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சுமார் 40,000 ரூபாய் பெறுமதியான தயிரை உரிய வெப்பநிலை மற்றும் சுகாதாரத் தரநிலைகளைப் பேணாமல் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இருவருக்கும் தலா 18 மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவிலிருந்து வவுனியா, குறுமன்காட்டிலுள்ள கூட்டுறவு விற்பனை நிலையமொன்றுக்கு தயிர் கொண்டு செல்லப்பட்டபோது, வவுனியா நகர சபையுடன் இணைந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மேற்கொண்ட சோதனையின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
உரிய வெப்பநிலையைப் பேணாமல் தயிரைக் கொண்டு சென்றமை, மனித நுகர்வுக்கான உணவுப் பொருட்களுடன் கால்நடைத் தீவனத்தையும் சேர்த்து வைத்திருந்தமை, பதிவு சான்றிதழின்றி உணவுப் பொருட்களைத் தயாரித்தமை, உணவுப் பொருட்களின் பெயரிடல் விதிமுறைகளை மீறியமை மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களைக் கொண்டு சென்றமை உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து, குறித்த தயிர்த் தொகுதி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் நிறைவில், இருவருக்கும் மொத்தம் 60,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், 18 மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையையும் வழங்கியுள்ளது.
பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் போக்குவரத்தின்போது உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.