சிறுவர் தினத்தில் சிறார்களின் மன சுதந்திரத்தைப் பாதுகாக்க அமைச்சர் சரோஜா போல்ராஜ் அழைப்பு
அதிகரித்து வரும் போட்டித் தன்மை கொண்ட சூழலினால் சிறார்கள் இழந்துள்ள மன சுதந்திரம், ஒழுக்கவியல் வளர்ச்சி மற்றும் சிறுவர் பிராயத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தனது உலக சிறுவர் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
"உறுதியான மனங்கள் - வளமான சிறார்கள்" எனும் இவ்வாண்டின் தீமை (Theme - கருப்பொருள்) மையப்படுத்தி கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், பெரியவர்களின் எதிர்பார்ப்புகளை சிறுவர்கள் மீது திணிக்காமல், அவர்களின் தனித்துவத்தையும் எதிர்காலக் கனவுகளையும் புரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உள்ளதாக சுட்டிக்காட்டினார். அத்துடன், ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது அந்நாட்டின் சிறார்களின் புன்னகையிலேயே பிரதிபலிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார.
"சிறார்களுக்கு பாதுகாப்பான உலகம் - படைப்பாற்றல் மிக்க எதிர்காலத் சந்ததி" எனும் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இனம், மதம், பொருளாதாரப் பின்னணி அல்லது சமூக அந்தஸ்து போன்ற எந்தவொரு பாகுபாடுமின்றி அனைத்துச் சிறுவர்களையும் சமமாக நடத்துவதற்கு அமைச்சு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது.
சிறார்களின் உடலியல் மற்றும் உளவியல் நலன்களை உறுதிப்படுத்தல், உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் தேவையான வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றிற்கான அரசாங்கத்தின் உறுதியை மீளவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், பலமானதொரு இலங்கையின் எதிர்கால சந்ததியாக சிறுவர்கள் உலகை பெருமிதத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.