சிங்கப்பூரில் தீபாவளி விழாவைக் கொண்டாடிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம்
சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளி விழா, ஸ்ரீ சென்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிங்கப்பூரில் வாழும் இலங்கையர்கள், பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சமய வழிபாடுகள் மற்றும் பாரம்பரிய மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது.
இதன்போது உரையாற்றிய இலங்கை உயர்ஸ்தானிகர், கலாசார மரபுகளைப் பாதுகாத்தல், பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துதல் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் தீபாவளிப் பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
நிகழ்வின் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட GFTN அமைப்பின் பிரதித் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நீல் பரேக், இலங்கை மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தகக் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.
அத்துடன், இரு நாடுகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.
விழாவின் ஒரு பகுதியாக சக்தி ஃபைன் ஆர்ட்ஸ், ஸ்வயம்பு ஃபைன் ஆர்ட்ஸ், தத்வா மற்றும் SSVT இசை மற்றும் நடனக் கல்லூரி ஆகியவற்றின் கலைஞர்களால் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
சிங்கப்பூரில் இயங்கும் பல்வேறு இலங்கை சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.