சவூதி அரேபியாவில் பணிபுரிந்த 40 இலங்கைத் தொழிலாளர்களுக்கு 5.69 கோடி ரூபாய் நிலுவைச் சம்பளம் மீட்பு!
சவூதி அரேபியாவில் பணிபுரிந்தபோது பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட 40 இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, நிலுவையில் இருந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக சுமார் 5.69 கோடி ரூபாய் மீட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை இன்று (நவம்பர் 13) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அதன் பொது முகாமையாளர் தேவப்பிரிய குணசிங்க தலைமையில் தொழிலாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையின் சவூதி அரேபியாவுக்கான தூதரகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சட்டரீதியான தலையீடுகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் இந்தத் தொகை மீட்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2026 ஜனவரி மாதம் முதல் நவம்பர் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 639,381 சவூதி ரியால்கள் மீட்கப்பட்டுள்ளன. இது இலங்கை நாணய மதிப்பில் சுமார் 56.9 மில்லியன் ரூபாவாகும்.
மேலும், சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தொழிலாளர்களை விடுவித்து மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கும் இலங்கைத் தூதரகம் தலையீடுகளை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட பணம், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தக் கொடுப்பனவுகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைச் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் எனப் பணியகம் தெரிவித்துள்ளது.