சர்வதேச கல்வி ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தும் இலங்கைப் பல்கலைக்கழகங்கள்
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான சர்வதேச கல்வி ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்கான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் பிரதமராகவும் உள்ள ஹரிணி அமரசூரியவினால் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கைப் பல்கலைக்கழகங்களின் சர்வதேச தரவரிசையை மேம்படுத்துதல், உலகளாவிய கல்வி வலையமைப்பில் அவற்றின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் கல்வித்துறையின் சர்வதேசமயமாக்கலை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த ஒத்துழைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்படி, கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கும் இந்தியாவின் மணிப்பால் அகடமிக்கும் இடையிலும், புத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்துக்கும் தாய்லாந்தின் மஹாமகுட் பௌத்த பல்கலைக்கழகத்துக்கும் இடையிலும் கல்விசார் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், மொரட்டுவைப் பல்கலைக்கழகம் சீனா மற்றும் ஸ்பெயினில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கான ஒப்பந்தங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கும் அவுஸ்திரேலியாவின் RMIT பல்கலைக்கழகத்துக்கும் இடையில் முதுகலை ஆராய்ச்சிப் பயிற்சிகளை இணைந்து முன்னெடுப்பதற்கான குடை ஒப்பந்தம் (Umbrella Cotutelle Agreement) ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் சர்வதேச கல்விசார் தொடர்புகள் மற்றும் ஆராய்ச்சித் திறன்களை மேலும் மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.