சர்ச்சைக்குரிய வசாவிளான் இராணுவ வைத்தியசாலையை நேரில் பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வசாவிளான் இராணுவ வைத்தியசாலையை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர், முதலில் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன மற்றும் வடக்கு மாகாணத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக, மூலோபாயத் தேவைகள், வழங்கல் ஏற்பாடுகள், படையினரின் நலன்புரி உள்ளிட்ட முக்கிய இராணுவ விவகாரங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வசாவிளான் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இராணுவ வைத்தியசாலைக்கும் பாதுகாப்புச் செயலாளர் விஜயம் செய்துள்ளார். இதன்போது, வைத்தியசாலையின் கட்டடத் தொகுதியைப் பார்வையிட்டதுடன், அதன் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.
36 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவக் கட்டுப்பாட்டில் காணிகள்
குறித்த வைத்தியசாலை அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட வசாவிளானின் பல பகுதிகள் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், வைத்தியசாலை அமைந்துள்ள காணி உட்பட இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி வசாவிளான் மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வசாவிளான் சந்தியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், குறித்த இராணுவ வைத்தியசாலையை அமைப்பதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் உரிய அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதன் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு கோரி வலிகாமம் வடக்கு பிரதேச சபையினர் யாழ்ப்பாண மாவட்டக் கட்டளைத் தளபதிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளனர்.
காணி விடுவிப்பு தொடர்பில் ஏமாற்றம்
இதற்கிடையில், பாதுகாப்புச் செயலாளரின் யாழ்ப்பாண விஜயத்தைத் தொடர்ந்து, இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
எனினும், இந்த விஜயத்தின்போது காணி விடுவிப்பு தொடர்பில் எவ்வித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.
இதனால், தமது பூர்வீகக் காணிகளை மீண்டும் பெற்றுக்கொள்ளக் காத்திருக்கும் காணி உரிமையாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.