சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் போலிச் செய்திகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது – பொலிஸ் பேச்சாளர்
சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலான போலிச் செய்திகள், தவறான புரிதல்கள் மற்றும் வழிநடத்தப்படும் கருத்துகளை இலங்கைப் பொலிஸார் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஊடக சுதந்திரம் என்பது வரையறையற்ற அதிகாரம் அல்ல என்றும், அது ஒரு சமூகப் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார்.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாகப் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 56ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைச் சுட்டிக்காட்டிய அவர், நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பொலிஸ் அதிகாரியும் எந்நேரமும் கடமையில் இருப்பவராகக் கருதப்படுவதாகத் தெரிவித்தார்.
குற்றங்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களைத் தடுத்தல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தல், சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கைது செய்தல், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துதல், பொது அமைதியைப் பாதிக்கக்கூடிய தகவல்களைச் சேகரித்து உரிய தரப்பினருக்குத் தெரியப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் பொலிஸ் அதிகாரிகளுக்கு இருப்பதாகவும் அவர் விளக்கினார்.
சமூகத்தின் நலனுக்காகவே பொலிஸார் செயற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், போலிச் செய்திகள் பொதுமக்களின் அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
"இவ்வாறான செயற்பாடுகளை நாம் பொறுத்துக்கொள்ளப் போகிறோமா? இல்லை. நாம் சமூகத்திற்காகப் பணியாற்றுகிறோம். சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. போலிச் செய்திகள் சமூக நல்லிணக்கத்தைத் தடுத்து, பாதிப்பை ஏற்படுத்த அல்லது சீர்குலைக்க நாம் அனுமதிக்கக் கூடாது" என அவர் மேலும் தெரிவித்தார்.