கொழும்பு துறைமுக நகரில் தெற்காசியாவின் முதலாவது ‘ஏர் டோம்’ அமைப்பு – 4,000 பேருக்கு இடமளிக்கும் வசதி
கொழும்பு துறைமுக நகரில் (Port City Colombo) தெற்காசியாவின் முதலாவது காற்றழுத்த ஆதரவு கொண்ட ‘ஏர் டோம்’ (Air Dome) அமைப்பு வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது.
இந்தப் பிரமாண்டமான அமைப்பு, ஒரே நேரத்தில் 4,000 விருந்தினர்கள் வரை கலந்துகொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள சிவில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர், 2026 டிசம்பர் மாத இறுதிக்குள் இது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச மாநாடுகள், கண்காட்சிகள், வர்த்தகக் கூட்டங்கள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட பிரமாண்ட நிகழ்வுகளை நடத்துவதற்காக இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
துபாய் உள்ளிட்ட சர்வதேச நிகழ்வு மையங்களில் காணப்படும் இத்தகைய அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக, CHEC Port City Colombo நிறுவனத்தின் காணி அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான ஷலக்க விஜேரத்ன, நியூஸ்வயர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மிகப்பெரிய பல்நோக்கு மாநாட்டு மையம் துறைமுக நகரில் நிரந்தரமாக நிர்மாணிக்கப்படும் வரை, இந்த ஏர் டோம் இடைக்கால நிகழ்வு மையமாகச் செயற்படவுள்ளது.
உத்தேச நிரந்தர மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் 4,000 பேர் அமரக்கூடிய உள்ளக பல்நோக்கு அரங்கமும், ஒரே நேரத்தில் 5,000 பேர் பங்கேற்கக்கூடிய வெளிப்புற நிகழ்வு வசதியும் அமைக்கப்படவுள்ளன.
மேலும், இந்த மாநாட்டு மையத்திற்கு அருகில் 400 முதல் 450 அறைகளைக் கொண்ட நட்சத்திரத் தரத்திலான வர்த்தக ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் கொழும்பு துறைமுக நகரின் மாஸ்டர் பிளானில் திட்டமிடப்பட்டுள்ளது.