கொழும்பில் 5.96 கோடி ரூபாய் நிதி மோசடி – தனியார் நிறுவன ஊழியர் கைது!
கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் போலியான தகவல்களை கணினி தரவுத்தளத்தில் பதிவுசெய்து, 5 கோடியே 96 இலட்சத்து 56 ஆயிரத்து 496 ரூபாய் 84 சதம் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 30 வயதுடையவர் எனவும், மாளிகாவத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தனியார் நிறுவனத்தின் கணினி தரவுத்தளத்தில் போலியான தகவல்களைப் பதிவு செய்து, வங்கிக் கணக்குகள் ஊடாக இந்தப் பெருந்தொகைப் பணத்தை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை மோசடி மற்றும் நிதியை முறைகேடாகக் கையாடியமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு 4 இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர், நேற்று வெள்ளிக்கிழமை (30) காலை சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த நிதி மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.