கொழும்பில் போதைப்பொருள் கடத்தல்: மருத்துவப் பரிசோதனையின்போது பெண்ணிடமிருந்து 80.9 கிராம் கொக்கெய்ன் மீட்பு!
கொழும்பில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் இருந்து 80.9 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர் வெளியேற்றிய மலத்தில் இருந்து இந்தப் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் தமது உடலுக்குள் கொக்கெய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்துள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் வணிக வளாகம் ஒன்றில் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, ஆரம்பகட்ட நடவடிக்கையில் 1.46 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்தப் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.