கைவிடப்பட்ட திரைப்படம் தொடர்பான சர்ச்சை: வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் விளக்கம்!
இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்ட திரைப்படம் தொடர்பான சர்ச்சைகளுக்கு, இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ விளக்கங்கள் அளிக்கப்பட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரபல இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் அளித்த நேர்காணல் ஒன்றில், தனது மூத்த மகனும் இயக்குநருமான வெங்கட் பிரபுவின் திரைப்பயணம் குறித்துப் பேசியிருந்தார். அப்போது, குறிப்பிட்ட நடிகர் ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய அவர், "எனது மகனுக்கு திகதி கொடுத்திருந்த ஒரு நடிகர், தனது திரைப்படம் ஒன்று வெற்றியடைந்ததும் அதே இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். அவரை மட்டுமே நம்பியிருந்ததால் வெங்கட் பிரபுவின் அடுத்த படப்பணி தாமதமானது" என ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.
இந்த நேர்காணலின் காணொளிப் பதிவு இணையதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கங்கை அமரன் குறிப்பிட்ட அந்த நடிகர் சிவகார்த்திகேயன் தான் என்ற ஊகங்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரவி வந்தன.
இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர், "சிவகார்த்திகேயன் எனக்கு எப்போதுமே சிறந்த நண்பர் மற்றும் சகோதரர் போன்றவர். இது தொடர்பாகப் பல தவறான தகவல்களும் ஊகங்களும் பரவி வருகின்றன. ஒரு தந்தையாகத் தனது மகனின் படப்பணி தாமதமாகும் போது விரக்தி அடைவது இயல்பான ஒன்றுதான். இந்த விவகாரத்தில் முழுமையான தகவல்கள் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதற்காக நான் அவரை எந்தவிதத்திலும் குறை சொல்ல மாட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நான் மிகவும் அமைதியான முறையில் எனது பணிகளைச் செய்ய விரும்புபவன். எனது படங்கள் குறித்த தகவல்களை எனது தந்தையிடம் கூடப் பகிர்ந்துகொள்வதில்லை. பல காரணங்களால் அந்தத் திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது, அவ்வளவுதான். இதில் எங்கள் இருவருக்கும் இடையே எந்தவித மனக்கசப்பும் இல்லை. நல்ல கதையும் சரியான நேரமும் அமையும் போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நிச்சயம் பணியாற்றுவேன். எனவே, தயவுசெய்து இந்தச் சர்ச்சைக்கு அனைவரும் முற்றுப்புள்ளி வையுங்கள். நான் எனது அடுத்த படப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். எனது சகோதரர் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்திற்கு எனது வாழ்த்துகள்" என்றும் வெங்கட் பிரபு பதிவிட்டிருந்தார்.
வெங்கட் பிரபுவின் இந்தப் பதிவிற்குப் பதிலளிக்கும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், "இயக்குநர் அவர்களே, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கு நீங்கள் இவ்வளவு தீவிரமாக விளக்கம் அளிக்கத் தேவையில்லை. உங்களின் வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்களது அடுத்த திரைப்படத்திற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஏற்கனவே உங்களிடம் கூறியது போல, என்றும் உங்களது தீவிர ரசிகன் நான். விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறேன்" என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இரு முன்னணிச் பிரபலங்களின் இந்த விளக்கங்கள் மூலம், கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவி வந்த வதந்திகளுக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.