கிரிஷ் வழக்கில் புதிய திருப்பம்: ரூ. 70 மில்லியன் நிதி மாயமானது அம்பலம்!
கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கிரிஷ் நிறுவன கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், கிரிஷ் ட்ரான்ஸ்வேர்க்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாய் பணம் 'சிலோன் பிரீமியர் ஸ்போர்ட்ஸ்'அமைப்பின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்படவில்லை என்ற புதிய தகவல் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அம்பலமாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
நீதிமன்றில் மேலதிக விளக்கங்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிச் சட்டப் பணிப்பாளர் அமா விஜேசிங்க, சம்பத் வங்கியில் உள்ள சிலோன் பிரீமியர் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் வங்கிக் கணக்கை சோதனையிட்டதாகவும், அதில் கிரிஷ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ரூ. 70 மில்லியன் பணம் வைப்பு செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த சிலோன் பிரீமியர் ஸ்போர்ட்ஸ் அமைப்பானது நாமல் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட போதிலும், அதில் அவர் உத்தியோகபூர்வ பதவிகள் எதையும் வகிக்கவில்லை என்றும், தொழிலதிபர் நிமால் பெரேராவே அதன் தலைவராகச் செயற்பட்டுள்ளார் என்றும் ஆணைக்குழு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தது. மேலும், 'கால்டன் சூப்பர் செவன்ஸ்' (Carlton Super Sevens) ரக்பி போட்டித் தொடருக்கு கிரிஷ் நிறுவனம் எவ்வித அனுசரணையையும் வழங்கியதற்கான சான்றுகள் எதுவும் விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டது.
2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொழிலதிபர் நிமால் பெரேராவுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து கிரிஷ் ட்ரான்ஸ்வேர்க்ஸ் நிறுவனத்தின் கணக்காளர் ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஆணைக்குழு, நிறுவனத்தின் வழக்கமான நடைமுறைகளுக்குப் புறம்பாகவே இந்த நிதிப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாகக் கூறியது. எனினும், பணிப்பாளர் சபையின் ஒப்புதலின் பேரிலேயே இப் பணம் விடுவிக்கப்பட்டதாக கணக்காளர் தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனத்திற்கு நிமால் பெரேரா எவ்வித சேவையையும் வழங்காத போதிலும், அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இப் பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், 2012 டிசம்பர் 15 ஆம் திகதியிட்டு நாமல் ராஜபக்ஷவினால் கிரிஷ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பிலும் நீதிமன்றில் தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த பணத்தைப் பெற்றுக்கொண்டமைக்காக நன்றி தெரிவித்து அனுப்பப்பட்ட இக்கடிதம் குறித்து ஆராய்ந்த போது, பெறப்பட்ட நிதி ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது. இதற்கமைய, இக்கடிதத்தில் உள்ள கையெழுத்து நாமல் ராஜபக்ஷவுடையதா என்பதை உறுதிப்படுத்த அவரது கையெழுத்து மாதிரிகளைப் பெற்று பரிசோதிப்பதற்கு தேவையான உத்தரவைப் பிறப்பிக்குமாறும் ஆணைக்குழு நீதிமன்றைக் கோரியது.
இதேவேளை, மின்னஞ்சல் மற்றும் வான் அஞ்சல் மூலமாக அழைப்பாணைகள் அனுப்பப்பட்ட போதிலும், விசாரணை அதிகாரிகளின் முன் ஆஜராகத் தவறிய இந்திய பிரஜைகளான கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் அமித் கத்யால் மற்றும் ராஜேந்திர பிரசாத் குப்தா ஆகியோருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை கட்டளையை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஆணைக்குழு மன்றில் தெரிவித்தது.
இதற்குப் பதிலளித்த அமித் கத்யால் சார்பாக ஆஜரான சட்டத்தரணி, 2016 ஆம் ஆண்டு நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகள் இந்தியாவுக்கு விஜயம் செய்த போது தனது கிளையண்ட் வாக்குமூலம் அளித்திருந்ததாகவும், தற்போது அவர் உடல்நலக்குறைவு காரணமாக பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இருப்பினும், திங்கட்கிழமை இடம்பெற்ற விசாரணை விசாரணையின் போது அமித் கத்யாலுக்கு எதிராக பிடியாணை எதையும் ஆணைக்குழு கோரவில்லை என்றும், முன்னதாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை போதிய ஆதாரங்கள் இன்மையால் நிராகரிக்கப்பட்டதாகவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.
இதன்போது நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சட்டப்பூர்வ ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்ட தொகையை எவ்வாறு இலஞ்சம் எனக் கருத முடியும் எனக் கேள்வியெழுப்பினார்.
இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதவான், சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பங்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அக்டோபர் 12 ஆம் திகதி நீதிமன்றிற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன், பிணை கோரிக்கை மீதான கட்டளை அக்டோபர் 16 ஆம் திகதி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.