காதல் விவகார மோதலில் இரு இளைஞர்கள் பலி: 16 வயதுச் சிறுவன் படுகாயம்
கொழும்பு 10, மாளிகாவத்தை பகுதியில் நேற்று இரவு (29) இடம்பெற்ற மோதலில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், 16 வயதுடைய சிறுவன் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஆடை விற்பனையகத்திற்கு அருகில் நேற்று இரவு 10:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
காதல் விவகாரத்தை மையமாகக் கொண்டு இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட காரசாரமான தர்க்கம், கைக்கலப்பாக மாறி இறுதியில் கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது.
இந்த மோதலில் படுகாயமடைந்த மூவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது அப்துல்லா மற்றும் முகமது ரைஹான் ஆகிய இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
காயமடைந்த 16 வயதுடைய மற்றைய சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவசர சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.