காட்டு யானையைப் பிடிக்க அல்லது காயப்படுத்த பொறி வெடி வைத்த நபருக்கு ரூ. 3 இலட்சத்து 10 ஆயிரம் அபராதம்!
காட்டு யானையைக் காயப்படுத்தும் அல்லது கொல்லும் நோக்கில் பொறி வெடி (Trap Gun) ஒன்றை அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு ரூ. 3 இலட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொக்கேபே வனப் பாதுகாப்புப் பகுதிக்கு அருகிலுள்ள தனியார் காணியொன்றின் எல்லையில் பொறி வெடி அமைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி வனஜீவராசிகள் அதிகாரிகள் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஹட்டகஸ்திகிலிய வனஜீவராசிகள் அலுவலகத்தின் வனவிலங்கு தள உதவியாளர் எம்.ஏ.கே.எஸ். திஸாநாயக்க தலைமையிலான அதிகாரிகள் குழுவினரே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, தனியார் காணியின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த பொறி வெடியையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியும் கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, ஒக்டோபர் 30ஆம் திகதி குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபருக்கு ரூ. 3 இலட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கஹட்டகஸ்திகிலிய வனஜீவராசிகள் பிரிவில் சட்டவிரோத வனவிலங்கு வேட்டைகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான ரோந்து நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.