கட்டுமானத் துறையின் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கும் ‘Builders Gateway’ அலகு நாளை மறுதினம் திறப்பு
பொதுத்துறை கட்டுமானத் துறையில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘Builders Gateway’ எனப்படும் கட்டுமானத் துறை வசதிப்படுத்தல் அலகு எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள VIYASA நிலையத்தில் காலை 10 மணிக்கு இந்த அலகு திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தேசிய வணிக வசதிப்படுத்தல் நிலையத்தின் (VIYASA) கீழ், ஜனாதிபதி செயலகத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த அலகு செயற்படவுள்ளது.
பெரிய அளவிலான அரசாங்க அபிவிருத்தித் திட்டங்கள் முதல் சிறிய அளவிலான கட்டுமானப் பணிகள் வரை அனைத்து வகையான கட்டுமானத் திட்டங்களிலும் ஏற்படும் பிரச்சினைகளில் தலையிட்டு, அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதுடன், திட்டங்களைத் திறம்படவும் விரைவாகவும் நிறைவு செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் இந்த அலகின் முக்கிய நோக்கமாகும்.