கடுவெல தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு – மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகம்
கடுவெல நகரில் அமைந்துள்ள மின்சாதன விற்பனை நிலையத்தில் இன்று (19) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதியினர் மற்றும் அவர்களது இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடுவெல நகரில் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் இயங்கி வந்த மின்சாதன விற்பனை நிலையத்தில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தீ பரவியுள்ளது.
மாலபே, தலஹேன பகுதியைச் சேர்ந்த குறித்த தம்பதியினர், வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்தக் கட்டடத்தில் மின்சாதன விற்பனை நிலையத்தை நடத்தி வந்ததுடன், அதன் மேல் மாடியில் தங்களது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர்.
நேற்றைய தினம் வியாபார நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர் குடும்பத்தினர் மேல் மாடியில் உறங்கச் சென்றிருந்த நிலையில், அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது தீ வேகமாகப் பரவியதால் மேல் மாடியில் இருந்த நால்வரும் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய தந்தை, 28 வயதுடைய தாய் மற்றும் ஐந்து வயது, இரண்டு வயது ஒன்பது மாதங்களான அவர்களது இரண்டு மகள்கள் எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் முல்லேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியும் வகையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.