கடத்தல் மிரட்டல்: கொல்கத்தாவில் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து மும்பை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்றுக்கு கடத்தல் மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை நோக்கிப் புறப்படுவதற்குத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறைக் கண்ணாடியில், 'விமானம் கடத்தப்படும்' என்ற மிரட்டல் வாசகம் எழுதப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டதுடன், விமானப் பணியாளர்கள் உடனடியாக விமானிக்கு தகவல் வழங்கினர். விமானியும் இந்த விடயம் குறித்து விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, புறப்படுவதற்குத் தயாராக இருந்த விமானம் ஓடுபாதையில் இருந்து அகற்றப்பட்டு, விமான நிலையத்தின் பாதுகாப்பான தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன்பின்னர், மத்திய தொழிற்படைப் பாதுகாப்புப் படையினர் (CISF) மற்றும் விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து விமானத்தில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
விமானத்திற்குள் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பதைக் கண்டறிய விமானத்தின் அனைத்து பகுதிகளிலும் விரிவான சோதனை நடத்தப்பட்டது.
இதேவேளை, விமானத்தின் கழிப்பறைக் கண்ணாடியில் மிரட்டல் வாசகத்தை எழுதியவர் யார் என்பது குறித்தும், இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்தும் காவல்துறையினரும் பாதுகாப்பு முகமைகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்காக விமான நிலைய வளாகம் மற்றும் விமானத்தின் உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களின் (CCTV) காட்சிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.