ஏர்பஸ் ஊழல் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை மறுப்பு – டிசம்பர் 2 வரை விளக்கமறியல்
இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச ஊழல் விவகாரம் தொடர்பில், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, ஏர்பஸ் விமானக் கொள்வனவு ஒப்பந்தத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.