எயார்பஸ் வழக்கு: அரவிந்த டி சில்வாவின் 40 மில்லியன் பிணைப்பணம் பறிமுதல்
சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்வனவு ஊழல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய சந்தேகநபருக்கு பிணைப் பொறுப்பாளராகக் கையெழுத்திட்ட, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியினால் வைப்பிலிடப்பட்ட 40 மில்லியன் ரூபா பிணைப்பணத்தைப் பறிமுதல் செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் மறைந்த முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க என்பவருக்காகவே இவர்கள் இருவரும் பிணைப் பொறுப்பாளராகக் கையெழுத்திட்டிருந்தனர்.
குறித்த சந்தேகநபர் தலா 20 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், பிணைப் பொறுப்பாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, பிணைத்தொகையான 40 மில்லியன் ரூபாவில் 20 மில்லியன் ரூபாவை இன்றைய தினமே செலுத்துவதாக நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தினார்.
இதற்கு அனுமதி வழங்கிய நீதவான் பசன் அமரசேன, எஞ்சிய 20 மில்லியன் ரூபா தொகையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதிக்குள் செலுத்துவதற்கு அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
எயார்பஸ் ஊழல் விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து, சந்தேகநபரான விஜேநாயக்கவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரைப் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரே அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, தனது கணவரின் தற்கொலைக்குப் பின்னர் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாலும், இலங்கை திரும்புவதற்கு அச்சப்படுவதாலும் அவர் தற்போது தமது கட்டுப்பாட்டில் இல்லை எனப் பிணைப் பொறுப்பாளர்கள் நீதிமன்றத்தில் நிவாரணம் கோரினர்.
எனினும், குறித்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேகநபரின் கணவர் உயிரிழப்பதற்கு முன்னரே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இவ்வழக்கின் மூன்றாவது சந்தேகநபரும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகனுமான ஷமீந்திர ராஜபக்ஷவிற்கு எதிராகவும் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.