“என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம்; ஆனால் நான் அவர்களை மறக்கவில்லை” – பொட்டல ஜயந்த
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் தன்னைத் தெரியாது எனத் தெரிவித்தமைக்கு, நாடுகடத்தப்பட்டு வாழும் இலங்கை ஊடகவியலாளர் பொட்டல ஜயந்த பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பொன்றையும், அப்போது தனக்கும் சக ஊடகவியலாளர் சனத் பாலசூரியவுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களையும் நினைவுகூர்ந்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, தானும் சனத் பாலசூரியவும் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டதாக பொட்டல ஜயந்த தெரிவித்துள்ளார்.
அங்கு தங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகப் போராட்டங்களை ஏற்பாடு செய்தால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என கோட்டாபய ராஜபக்ஷ எச்சரித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது அப்போதைய லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார மற்றும் லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகியோரும் பிரசன்னமாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றபோதும், பொலிஸார் முறைப்பாட்டைப் பொறுப்பேற்க மறுத்ததாகவும் பொட்டல ஜயந்த தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்குச் சில மாதங்களுக்குப் பின்னர், வெள்ளை வானில் கடத்தப்பட்டு தான் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும், இதனால் தனது இடது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக 28 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதுடன், ஆறு மாதங்கள் படுக்கையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இன்றுவரை பகுதியளவிலான உடல் ஊனத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் சாட்சியமளித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொட்டல ஜயந்தவைத் தனக்குத் தெரியாது என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். எனினும், பந்துல பத்மகுமாரவைத் தனக்குத் தெரியும் என அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.
இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பொட்டல ஜயந்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
“என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம். ஆனால், என்னைச் சித்திரவதை செய்தவர்களை நான் மறக்கவில்லை” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.