உத்தரப் பிரதேசத்தில் கோர விபத்து: கார் தீப்பிடித்து எரிந்ததில் 6 நண்பர்கள் உடல் கருகி உயிரிழப்பு
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணித்த ஆறு நண்பர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
ஹரியானா மாநிலம், ஹான்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு நண்பர்கள், அமாவாசையை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடுவதற்காக ஹரித்வாருக்குச் செல்ல திங்கள்கிழமை அதிகாலை காரில் புறப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயணித்த கார், உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து, வீதியோர மின்கம்பத்தில் மோதிய கார், தொடர்ந்து சாலைத் தடுப்பிலும் மோதி தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.
இதனால் காரில் திடீரென தீப்பற்றியதுடன், மளமளவெனப் பரவி வாகனம் முழுவதும் தீக்கிரையாகியுள்ளது.
விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னரே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
எனினும், அதற்குள் கார் முற்றாக எரிந்து நாசமானதுடன், அதில் பயணித்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தீயில் கடுமையாகக் கருகிய அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் விபத்துக்குள்ளான காரின் இடிபாடுகள் அகற்றப்பட்டன. இந்த விபத்து காரணமாக அப்பகுதி நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, விபத்துக்குள்ளான கார் மணிக்கு சுமார் 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.