ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்னேற்றம் – ட்ரம்ப் அறிவிப்பு
ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், மத்திய கிழக்கின் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டு மேலதிக இராணுவ நடவடிக்கைகள் அவசியமானால், அமெரிக்கப் படைகள் அதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, தனது Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவிலேயே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ஏற்கனவே முன்னெடுத்து வரும் கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து பேணுவதற்கு கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அத்துடன், ஈரானின் தரைவழிப் போக்குவரத்துப் பாதைகளை இலக்காகக் கொண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 'Operation Iron Gate' நடவடிக்கைக்கும் இந்த நாடுகள் ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஒருபோதும் அணுவாயுதங்களைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படக் கூடாது என்பதில் குறித்த நாடுகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கின் நிலைமைகளுக்கு ஏற்ப மேலதிக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அமெரிக்கா பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிடமிருந்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கின் ஏனைய நாடுகள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்த ட்ரம்ப், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னேற்றமடைந்து வருவதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தச் செயற்பாட்டின் போது அமெரிக்காவின் தேசிய நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும், இராணுவ மோதல் முடிவுக்கு வருவது அமெரிக்க மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், தெஹ்ரான் மீதான இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை வாஷிங்டன் தொடர்ந்து பேணி வருகிறது.
எவ்வாறாயினும், வளைகுடா நாடுகளின் நிலைப்பாடு தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.