இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப் படகிலிருந்து ரூ.1.5 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!
இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிப் படகொன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி ரூ.1.5 பில்லியனைத் தாண்டும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (13) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மிரிஸ்ஸ பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற குறித்த மீன்பிடிப் படகில் சுமார் 110 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின்போது, படகுடன் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 52 முதல் 60 கிலோகிராம் வரையிலான ஹெரோயின் மற்றும் 50 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் அடங்குவதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
'யசிறு புத்த' (Yasiru Putha) என அடையாளம் காணப்பட்ட குறித்த மீன்பிடிப் படகு, கடந்த நவம்பர் 11ஆம் திகதி கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இதேவேளை, கடந்த ஒன்றரை மாத காலப்பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் ரூ.17 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மாத்தறை தலல்ல, டிக்கோவிட்ட மற்றும் யாழ்ப்பாணம் மாதகல் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்போது 417 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 414 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசாங்கத்தினால் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, கடற்படையினர் மாத்திரம் இதுவரையில் சுமார் ரூ.117 பில்லியன் சந்தைப் பெறுமதியான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அண்மையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களைத் தவிர்த்து, 2026ஆம் ஆண்டில் மாத்திரம் கடற்படையினரின் நடவடிக்கைகள் மூலம் ரூ.73 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.