இம்ரான் கான் விடுதலை தொடர்பான விவாதத்திற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் தடை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணை நாளை (21) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில், அரசாங்கத்தின் எதிர்ப்பைத் தொடர்ந்து அது நிராகரிக்கப்பட்டதாக அவர் இன்று (20) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இந்தத் தீர்மானம் குறித்து ஏமாற்றம் வெளியிட்ட அஜித் பி. பெரேரா, தமது பிரேரணை முழுமையாக மனிதாபிமான அடிப்படையில் முன்வைக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானின் உள்விவகாரங்களிலோ நீதித்துறை நடவடிக்கைகளிலோ தலையிடும் நோக்கம் அதற்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
இது அரசியல் விவகாரமோ சர்வதேச நெருக்கடியோ அல்ல எனக் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தான் அரசாங்கத்தின் உரிமைகளையும் அந்நாட்டின் நீதித்துறை அதிகாரத்தையும் தாம் மதிப்பதாகவும் கூறினார்.
உலக கிரிக்கெட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய சர்வதேசப் பிரபலமான இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் நலன் குறித்து கவனம் செலுத்துவதே இந்தப் பிரேரணையின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், இந்த விவகாரம் நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இதன்போது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்திய வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கையுடன் இருதரப்பு உறவுகளைக் கொண்ட நாடுகளுடன் இராஜதந்திர முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய விவகாரங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கம் விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கோ அல்லது அவற்றின் அரசாங்கங்களுக்கோ இடையில் சர்ச்சைகளை ஏற்படுத்தி, இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடிய விடயங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.
எனினும், அஜித் பி. பெரேரா தமக்கு ஒதுக்கப்பட்ட நாடாளுமன்ற நேரத்தில் இம்ரான் கான் தொடர்பான தனது தனிப்பட்ட கருத்துகளை வெளியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த அஜித் பி. பெரேரா, கடந்த காலங்களில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகளைத் தமது நாடு மறந்துவிடவில்லை எனக் குறிப்பிட்டார்.
மேலும், பலஸ்தீனம் மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான விவகாரங்கள் தொடர்பில் இதற்கு முன்னரும் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இம்ரான் கான் தொடர்பான பிரேரணையை மட்டும் ஏன் விவாதிக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பினார்.
உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்காகக் குரல் கொடுக்கும் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் பிரதமராகப் பதவி வகித்த இம்ரான் கான், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நலம் மற்றும் சிறைச்சாலையில் அவர் நடத்தப்படும் விதம் தொடர்பில் அவரது ஆதரவாளர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
1992ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை பாகிஸ்தான் அணி வெல்வதற்கு தலைமை தாங்கிய இம்ரான் கான், அந்நாட்டின் முக்கிய அரசியல் மற்றும் விளையாட்டுப் பிரமுகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.