இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இலங்கையின் கட்டினா பூஜை நிகழ்வு
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் கட்டினா பூஜை நிகழ்வில், புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் பங்கேற்றுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மத நிகழ்வில் பௌத்த பிக்குகள், இலங்கை சமூகத்தினர், இந்திய பௌத்தர்கள் உள்ளிட்ட பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
1939ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க புதுடெல்லி பௌத்த விகாரையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்ட அநகாரிக தர்மபாலவினால் நிறுவப்பட்ட இந்திய மகாபோதி சங்கத்துடன் தொடர்புடைய இந்த விகாரை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால மத மற்றும் கலாசார உறவுகளின் அடையாளமாக விளங்குகிறது.
பௌத்த பிக்குகள் கடைப்பிடிக்கும் மூன்று மாத கால மழைக்கால வாசம் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் கட்டினா பூஜை நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.