இந்தத் தலைமுறைக்குள்ளேயே வறுமையை ஒழிப்பதே அரசின் இலக்கு – அமைச்சர் உபாலி பன்னிலகே
இலங்கையில் தற்போதைய தலைமுறைக்குள்ளேயே வறுமையை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு, குறைந்த வருமானம் பெறும் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும், நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
இன்று (17) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் வறுமை ஒழிப்பும் ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர், மக்களுக்கு நிதியுதவி வழங்குவதுடன் மாத்திரம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் மற்றும் சமூக ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய மக்களின் பொருளாதார, சமூக ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுயதொழில் வாய்ப்புகள், வருமானத்தை ஈட்டக்கூடிய செயற்பாடுகள் மற்றும் நிலையான வாழ்வாதாரத் திட்டங்கள் ஊடாக மக்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக, கிராமப்புற மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘பிரஜா சக்தி’ தேசிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், இத்திட்டத்திற்காக 25 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு அபிவிருத்தித் திட்டத்தையேனும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வறுமையை ஒழிப்பதற்கு அரச நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வறுமைக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வுகாணும் நீண்டகாலத் திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் எந்தவொரு தனிநபரோ குடும்பமோ புறக்கணிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக நீதியை உறுதிப்படுத்தி, ஒவ்வொரு குடிமகனும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும், வறுமையற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் இறுதி இலக்கு என்றும் அமைச்சர் உபாலி பன்னிலகே மேலும் தெரிவித்துள்ளார்.