அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டுக் கொலை: சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
கடந்த மாதம் அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்குப் பொதுமக்களின் உதவியை இலங்கைப் பொலிஸார் கோரியுள்ளனர்.
2026 ஒக்டோபர் 1ஆம் திகதி அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியில் பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவராகத் தேடப்படும் சந்தேகநபர், அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய லியனகே தினேஷ் சுரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், இதுவரை பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள், அஹுங்கல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை 071-8591485 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தை 091-2264026 என்ற இலக்கத்திலோ தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.