அஸ்வெசும பயனாளர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி 2 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள தகுதியான குடும்பங்களுக்கு வழங்கப்படும் மூலதன மானியத்தை 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவிலிருந்து 2 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், இத்திட்டத்தின் மூலம் நன்மையடையும் குடும்பங்களின் எண்ணிக்கையையும் 10,975 இலிருந்து 11,500 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள தகுதியான குடும்பங்களுக்கே அதிகரிக்கப்பட்ட 2 இலட்சம் ரூபா மூலதன மானியம் வழங்கப்படவுள்ளது.
திட்டத்தின் முதற்கட்டச் செயற்பாடுகளின் அனுபவங்களைக் கருத்திற்கொண்டு, தனிப்பட்ட குடும்பங்களுக்கான நிதியுதவியையும் பயனாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உலக வங்கி இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்டத் திட்டத்தின் கீழ், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 4,900 குடும்பங்களுக்கு ஏற்கனவே மூலதன மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டத்தின் கீழ், ஐந்து மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் 6,600 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வறிய மற்றும் மிகவும் வறிய குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இதேபோன்ற மற்றுமொரு திட்டத்தின் கீழ், 8,660 குடும்பங்களுக்கு மூலதன மானியங்கள் வழங்கப்பட்டு, அந்தத் திட்டம் நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைய, இந்த மாற்றங்களுக்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரிப் பயனாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கான பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமைந்துள்ளது.