அரிசி நுகர்வை மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க வேண்டும் – அரச ஊழியர்களுக்கு லால் காந்த அறிவுரை
அரச ஊழியர்கள் தாங்கள் தற்போது உட்கொள்ளும் அரிசியின் அளவை மூன்றில் இரண்டு பங்காகக் குறைத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.டி. லால் காந்த அறிவுறுத்தியுள்ளார்.
அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அரச ஊழியர்கள் தங்களது உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், தான் மதிய உணவு உட்கொள்வதில்லை என்றும், அரச ஊழியர்கள் தற்போது சாப்பிடும் அரிசியின் அளவை மூன்றில் இரண்டு பங்காகக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதே தனது ஆலோசனை என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறான ஆலோசனைகள் பொதுவாக விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்பதை ஏற்றுக்கொண்ட அவர், நாளொன்றுக்கு மூன்று வேளையும் உணவு உட்கொள்வதால் அதிகளவிலான கார்போஹைட்ரேட் உடலுக்குள் செல்லக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது பரிந்துரை அரிசி நுகர்வை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல என்றும், ஒட்டுமொத்தமாக கார்போஹைட்ரேட் உணவுகளின் நுகர்வைக் குறைப்பதையே வலியுறுத்துவதாகவும் அமைச்சர் லால் காந்த தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், கார்போஹைட்ரேட் உணவுகளின் நுகர்வைக் குறைப்பது இலங்கையின் விவசாயத் துறைக்கும் நன்மை பயக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.