கனமழை தொடரும் நிலையில் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!
நாட்டில் நிலவும் தொடர் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, கிரிந்தி ஓயா மற்றும் வளவே ஆற்றுப் படுகைகளில் அமைந்துள்ள பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத், நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகள் மற்றும் நீரோடைகளின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி, கிரிந்தி ஓயா ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் தலா நான்கு அங்குலமும், மேலும் நான்கு வான்கதவுகள் தலா ஆறு அங்குலமும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் விநாடிக்கு சுமார் 3,000 கனஅடி நீர் கிரிந்தி ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றது.
அதேவேளை, கிரிந்தி ஓயா ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள அலிகோட்ட ஆர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
மேலும், மாவு ஆர நீர்த்தேக்கமும் வான்பாய்ந்து வருவதுடன், விநாடிக்கு 1,500 கனஅடிக்கும் அதிகமான நீர் மாவு ஆற்றில் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நீர் வெளியேற்றம் காரணமாக கிரிந்தி ஓயா மற்றும் வளவே ஆற்றுப் படுகைகளின் கீழ்ப்பகுதிகளில் நீர்மட்டம் திடீரென அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக வளவே ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் ஆற்றின் நீர்மட்ட உயர்வு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் ஆறுகளின் நீர்மட்ட மாற்றங்களைத் தொடர்ந்து அவதானிப்பதுடன், வான்கதவுகள் திறப்பு மற்றும் நீர்மட்ட உயர்வு தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் வெளியிடும் அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.