ஹோட்டல்களுக்கு சட்டவிரோதமாக வன இறைச்சி விநியோகம்; ஐந்து துப்பாக்கிகள், 100-க்கும் மேற்பட்ட பொறிகளுடன் சந்தேகநபர் கைது
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு சட்டவிரோதமாக வன விலங்குகளின் இறைச்சியை விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர், ஐந்து சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விலங்குகளைப் பிடிக்கும் பொறிகளுடன் அரநாயக்க பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலத்கொஹுபிட்டிய வனவிலங்கு அலுவலக அதிகாரிகள், அரநாயக்க, புளுகம்மன பகுதியில் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 12 போர் ரக துப்பாக்கி ஒன்று மற்றும் பொறி துப்பாக்கிகள் நான்கு உள்ளிட்ட ஐந்து சட்டவிரோத துப்பாக்கிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், 100-க்கும் மேற்பட்ட விலங்குகளைப் பிடிக்கும் கண்ணிப் பொறிகள், 1.5 கிலோகிராம் முள்ளம்பன்றி இறைச்சி, வெடிமருந்துப் பொருட்கள், துப்பாக்கித் தூள், ஈய உருண்டைகள் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், விலங்குகளைப் பிடிப்பதற்கான பொறிகளைத் தயாரிக்கவும் அமைக்கவும் பயன்படுத்தப்படும் பட்டாசுகள், வாணவேடிக்கைப் பொருட்கள், தீப்பெட்டிகள் மற்றும் செப்பு கம்பிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபர் நீண்டகாலமாக சட்டவிரோத வன இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு அவற்றை விநியோகித்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் அரநாயக்க சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் வன விலங்குகளின் இறைச்சி விற்பனையைத் தடுக்கும் வகையில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.