அரச பொறியியலாளர்களுக்கான களப்பணி கொடுப்பனவை ரூ.75,000 ஆக அதிகரிக்க சஜித் கோரிக்கை
அரச பொறியியலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த களப்பணி மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவை (FAT Allowance) மீண்டும் வழங்குவதுடன், அதனை ரூ.25,000 இலிருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (19) நிலையியற் கட்டளை 27(2)-இன் கீழ் கேள்விகளை எழுப்பிய அவர், அரச பொறியியலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குறித்த கொடுப்பனவு, கடந்த அரசாங்கத்தினால் 2024 ஜூலை 1ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் களப்பணிகளின்போது ஏற்படும் போக்குவரத்துச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, முந்தைய அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பின்பற்றாமல், தற்போதைய அரசாங்கம் குறித்த கொடுப்பனவைத் திருத்திய தொகையில் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
களப்பணிகளில் ஈடுபடும் அரச பொறியியலாளர்கள் போக்குவரத்துச் சிரமங்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாகவும் சஜித் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2024 ஜூன் 27ஆம் திகதியிடப்பட்ட 18/2015-5 ஆம் இலக்க சுற்றறிக்கையின் ஊடாக குறித்த கொடுப்பனவு இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர், பொறியியலாளர்களின் போக்குவரத்துச் செலவுகள் தொடர்பில் முறையான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதேவேளை, அரச பொறியியலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்தும் கவலை வெளியிட்ட சஜித் பிரேமதாச, ஒரு பொறியியலாளருக்கு சுமார் ரூ.106,000 மாத்திரமே சம்பளமாகக் கிடைப்பதாகக் குறிப்பிட்டார்.
இதன் காரணமாகத் திறமையான பொறியியலாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது ஆச்சரியமளிக்க வேண்டிய விடயமல்ல எனத் தெரிவித்த அவர், இவ்வாறு பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது தேசிய அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுக்கும் அரச துறையின் திறனைப் பலவீனப்படுத்துவதாகவும் எச்சரித்தார்.
அரச பொறியியல் துறையில் நிலவும் வெற்றிடங்கள் காரணமாக, தனியார் மற்றும் வெளிநாட்டு ஆலோசனை நிறுவனங்களின் சேவைகளில் அரசாங்கம் அதிகளவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய ஆலோசனைச் சேவைகளுக்காகச் செலவிடப்பட்ட நிதி தொடர்பான விபரங்களையும் அவர் கோரியதுடன், அரச பொறியியல் சேவையை வலுப்படுத்துவது செலவின அடிப்படையில் அதிக பயனுள்ளதாக அமையுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைப் பொறியியலாளர்களை மீண்டும் நாட்டுக்கு ஈர்ப்பது, அரச துறையில் நிலவும் பொறியியலாளர் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் தற்போதுள்ள பொறியியலாளர்களைத் தக்கவைத்துக்கொள்வது உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய விரிவான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
தகுதியான பொறியியலாளர்கள் இல்லாமல் அபிவிருத்தித் திட்டங்களுக்காகப் பெருமளவு நிதியை ஒதுக்குவதால் எதிர்பார்க்கப்படும் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.