அக்வான் புயல் இந்தியாவை நெருங்குகிறது: கடும் காற்று, கொந்தளிப்பான கடல் குறித்து சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அக்வான்' (Akvan) தீவிர புயல் இந்தியாவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பல நாள் மீன்பிடிப் படகுகளுக்காக இந்த எச்சரிக்கை இன்று (நவம்பர் 18) பிற்பகல் 3 மணி முதல் நாளை (நவம்பர் 19) பிற்பகல் 3 மணி வரை அமுலில் இருக்கும் என இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் அறிவுறுத்தலின்படி, தெற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள 'அக்வான்' தீவிர புயல், இன்று முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து சுமார் 680 கிலோமீற்றர் வடகிழக்கே, 13.1° வடக்கு அட்சரேகை மற்றும் 85.4° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டிருந்தது.
இந்தப் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதுடன், எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி முற்பகல் 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையோரத்தில் நெல்லூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது புயலின் தீவிரம் படிப்படியாகக் குறைவடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 10° வடக்கு முதல் 20° வடக்கு வரையிலும், 80° கிழக்கு முதல் 95° கிழக்கு வரையிலும் எல்லைப்படுத்தப்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குள் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மற்றும் கடற்படையினர் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படகுகள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்கால வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.