சுரேஷ் சலே வழக்கு: 10 மருத்துவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே தொடர்பான வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக, அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த 10 மருத்துவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை (Summons) பிறப்பித்துள்ளது.
கொழும்பு நீதவான் பசான் அமரசேன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனுவொன்றைப் பரிசீலித்த பின்னரே, வரும் ஒக்டோபர் 06-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குறித்த 10 மருத்துவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
சுரேஷ் சலேயின் இதயப் பகுதி வீக்கமடைந்துள்ளதாகவும், அவரது உடல்நிலையைச் சீராகப் பேணுவதற்கு பிரத்தியேகச் சாதனம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும் அண்மையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரியவந்திருந்தது.
அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே அவரது உடல்நிலை குறித்த விரிவான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே, குறித்த மருத்துவக் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் 10 மருத்துவர்களும் வரும் ஒக்டோபர் 06-ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.